தினவர்த்தமானம் 17 : 1-6                      13 மே 2022, வெள்ளி

“கர்த்தருடைய வழிகளில் நடப்பதற்கு அவன் தைரியங்கொண்டு மேடை கோவில்களையும், ஸ்தம்பங்களையும் யூதாவை விட்டகற்றினான்.” – தினவர்த்தமானம் 17 : 6

அமெரிக்க தேசத்தில், தைரியத்தோடு – துணிச்சலான சவால்களை செய்பவர்கள் யார் என்ற ஒரு சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயின் முடிவில் 65% பேர் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள், தங்கள் வாழ்வின் ஆதாரமாக திருமறையைக் கொண்டவர்கள்.கடவுள் பேரில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அசைக்க முடியாத செயல்களைச் செய்ய முடியும்.

தியானபகுதியில் யூதா நாட்டின் அரசர் யோசபாத்தைக் குறித்து சொல்லப்படுகிறது. யோசபாத் மற்ற அரசர்களைப் போல பாகாலை வணங்காமல் கடவுளுக்கு பிரியமான வழியில் நடந்தான். கடவுளின் கட்டளையின் படி நடந்தான். கடவுள் யோசபாத்தின் ராஜ்யத்தை திடப்படுத்தினர். கர்த்தரின் பெயரில் வைராக்கியம் கொண்டு ஆட்சி நடத்தினான். தைரியத்தோடு அன்னியதெய்வங்களின் பலிபீடங்களை தகர்த்துப் போட்டார்.

கடவுளின் கண்களில் யோசபாத் தயவு பெற்றார். நாட்டில் சமாதானம் நிலவியது.
யோசபாத் தமது ஆட்சி காலம் முழுவதும், கடவுள் பெயரில் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தார். தமது மக்கள் வழித்தப்பி போகும்போது கடவுளுக்கு நேராக மனந்திரும்ப அழைத்தார். மக்களும் மனந்திரும்பி கடவுளுக்கு நேராக தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.

அன்பானவர்களே, இன்று பாவநிகழ்வுகள் நிறைந்த உலகில் நாம் வாழ்கின்றோம் . கடவுள் பெயரில் வைராக்கியத்தோடு கிறிஸ்துவின் வழியில் வாழ அழைக்கப்படுகிறோம். அவ்விதம் வாழ நம்மில் இருக்கும் பல விக்கிரகங்களை அகற்ற படவேண்டும்.

பொன்னாசை, பொருளாசை என்கிற விக்கிரகங்களை அகற்ற மனம்திரும்புதல் அவசியம். கடவுள் இயேசுவில் நமது பாவங்களை மன்னிக்க வல்லவராய் இருக்கிறார். மன்னிப்பு பெறுவோம். கடவுளிடம் நம்பிக்கைக் கொள்வோம்.

அன்பின் கடவுளே! நாங்கள் எக்காலத்திலும் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு வாழ உதவி செய்தருளும். ஆமேன்.