2 தீமோத்தேயு 3 : 14-17                                  24 ஜனவரி 2022, திங்கள்

“…..கர்த்தர் தமது ஊழியனாகிய எலியாவைக் கொண்டு சொன்னதையே செய்து முடித்தார் என்றான்.” – 2 இராஜாக்கள் 10 : 10

ஆகாப் என்பவர் இஸ்ரவேலின் மன்னனாக இருந்தவர். இவர் தன் துணைவியாரின் தீய ஆலோசனைப்படி செயல்பட்டார். இறை வார்த்தையைத் தள்ளிப் போட்டார். எனவே ஆகாபின் குடும்பத்துக்கு வரும் அழிவை எலியா தீர்க்கத்தரிசி வழியாக கர்த்தர் முன்னறிவித்தார். “ஆகாபின் சந்ததியில் ஊரிலே சாகிறவனை நாய்களும் வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்கிறார்”

என்றார். ஆண்டுகள் கடந்தன. யேகூ என்பவர் அரசன் ஆனார். இவர் இறைவன் முன்னறிவித்தபடி ஆகாபின் குடும்பத்தை அழித்தான். அதாவது இறைவன் கூறிய வார்த்தை நிறைவேறியது. கர்த்தர் பொய்யுரையார். சொன்னதைச் செய்து முடிப்பவர்.

இஸ்ரவேல் மக்களைத் தீர்க்கதரிசிகள் கண்டித்துக் கொண்டே வந்தார்கள். கர்த்தரின் எச்சரிப்பைக் கூறிக் கொண்டே வந்தனர். ஆனால் இறை வார்த்தையை மக்கள் ஏற்றிடவில்லை. முடிவு என்ன தெரியுமா? இறை வார்த்தைப்படி வரலாற்றில் நிகழ்வுகள் நிகழ்ந்தன. வட நாடாகிய சமாரியா கி.மு. 722-ல் அசீரியர் கையில் விழுந்தது. தென்நாட்டைச் சேர்ந்த எருசலேம், கி.மு. 586ல் பாபிலோனியப் பேரரசின் கையில் வீழ்ச்சியுற்றது. அதாவது இறைவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகின்றார்.

நம் கையில் நமது கர்த்தர் தமது வார்த்தையை, திருமறையைத் தந்துள்ளார். திருச்சபை ஊழியர்கள் போன்றவர்கள் இறை வார்த்தையை நமக்குப் போதிக்கின்றனர். கிறிஸ்தவ வானொலி, தொலைக்காட்சி போன்றவை வழியாக என்னோடு பேசுகின்றார். தியானமலர் போன்ற ஏடுகள் எனக்கு இறைவார்த்தையை எடுத்துரைக்கின்றன.
இறை வார்த்தையை, இறை எச்சரிப்பை, அசட்டை செய்த ஆதாபின் குடும்பம் போன்று நாம் இருக்கவேண்டாம். தீர்க்கத்தரிசிகள் வழியாக கர்த்தர் கூறிய வார்த்தைகளை ஊதாசீனப்படுத்திய இஸ்ரவேல் மக்கள் போன்று இருக்கவேண்டாம். “கடவுளின் கிருபையை நீங்கள் வீணாய்ப் பெற்றவர்களாகாதபடி, நாங்கள் உடன் வேலையாட்களாக உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்… இதோ, இப்பொழுதே அனுக்கிரக காலம், இதோ, இப்பொழுதே இரட்சணிய நாள்” என்றார் புனிதர் பவுல். இறை வார்த்தையை ஏற்போம்! வார்த்தையானவராகிய இயேசுவுடன் வாழ்வோம்!

வார்த்தையானவரே! உமது வார்த்தை நிச்சயமானது என்பதை உணர்ந்து செயல்பட எனக்குத் துணைபுரிவீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.