லூக்கா 2 : 41-52 07 ஜனவரி 2022, வெள்ளி
“……ஞானமுள்ள ஒரு குமாரனைத் தாவீதுக்கு அருளிய கர்த்தர் இன்று புகழப்படுவாராக.” – 1 இராஜாக்கள் 5 : 7
இந்த மைந்தனைப் பெற்றிட இவன் தந்தை என்ன தவம் செய்தானோ எனப் போற்றப்படுதல் சிறப்பு என்பர். இன்றைய தியானப்பகுதியில் ஞானமுள்ள ஒரு மகன் கொடுக்கப்பட்டதற்காக பரமத் தந்தையாம் இறைவன் புகழப்படுகின்றார். மகிமைப்படுத்தப் படுகின்றார். மன்னன் சாலொமோனுக்கு ஞானத்தைத் தந்தவர் இறைவன். இந்த சாலொமோனின் ஞானம் எண்ணற்றவர்களை ஈர்த்தது.
அவர்களில் ஒருவர்தான் தீருவின் அரசனாகிய ஈராம். இந்த ஈராம்தான் சாலொமோனைத் தந்த விண்ணவருக்கும் நன்றி செலுத்துகின்றார்.
ஏலி ஆசாரியனின் மகன்கள் இருவர். இவர்களால் இறைவனின் நாமம் தூஷிக்கப்பட்டது. “இவ்விதமாக அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சன்னிதியில் மிகவும் பெரிதாயிற்று. ஜனங்கள் கர்த்தருக்குப் படைக்கும் காணிக்கையை அலட்சியம் பண்ணினார்கள்” என்று இந்நிகழ்வை திருவசனம் குறிப்பிடுகிறது. இன்று நமது பிள்ளைகளின் நிலைமை என்ன? நம் பிள்ளைகள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்? நம் பிள்ளைகளின் வார்த்தைகளையும் வாழ்க்கையையும் பார்க்கின்றவர்கள் என்ன சொல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்?
நமது பிள்ளைகள் வழியே இறைவன் புகழப்படட்டும். என் மகனை, என் மகளைப் பார்க்கின்றவர்கள் எல்லோரும் இறைவனுக்கு மகிமை செலுத்தட்டும். இறை நாமத்தை தோத்தரிக்கட்டும். அந்த விதத்தில் நாம் நமது பிள்ளைகளை இறைத்துணையோடு வளர்ப்போம்.
இத்திருவசனம் ஒரு தந்தை மற்றும் தாயின் பொறுப்பையும் வலியுறுத்துகின்றது. இறை நாமம் புகழப்படுவதற்குக் காரணமான இந்த மகனை பெற்றிட இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்ற கேள்வி நமது பிள்ளைகளைப் பார்க்கிறவர்கள் மனதிலும் எழும்படி நடந்து கொள்வோம்.
பரம தந்தையே! என் வாரிசுகளைக் காண்பவர்கள் உமது நாமத்தைப் புகழ்வார்களாக! இந்நோக்கத்துடன் அவர்களை வளர்த்திட தேவ ஞானத்தை எனக்குத் தந்தருள்வீராக. இயேசுவின் வழியே ஆமேன்.