தானியேல் 10 : 16-17 07 அக்டோபர் 2024, திங்கள்
“ஆண்டவனுடைய அடியேனாகிய நான் என் ஆண்டவனோடு பேசுவதெப்படி?” – தானியேல் 10 : 17
பாரசீக அரசனான கோரேஸ் அரசாண்ட காலத்தில் தானியேலுக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தப்பட்டது. அந்த காரியத்தை அறிந்துகொள்ள தானியேல் மூன்று வாரங்கள் ருசியான ஆகாரத்தை தவிர்த்து திராட்ச ரசத்தை வெறுத்து இருந்தார். இது முடிந்து `திக்ரீசு’ ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார்.
இங்கு தானியேல் மாபெரும் காட்சி ஒன்றைக் கண்டார். அதில் மெல்லிய பட்டாடை உடுத்தி இடையில் தங்க கச்சை கட்டிய ஒருவர் நின்றிருந்தார். முகம் மின்னல் போல் ஒளியாய் இருந்தது. பேச்சு மக்கள் கூட்ட இரச்சல் போல் இருந்தது.
தானியேலுடன் இருந்தவர்கள் இதைக் கண்டு ஓடிவிட்டார்கள். தானியேல் மயக்கத்தில் கீழே விழுந்தார். ஒரு கை அவரைத் தொட்டு கைகளையும் கால்களையும் ஊன்றி எழுந்து நிற்கும்படி செய்தது.
அப்போது தானியேல் என் தலைவருடைய ஊழியக்காரனாகிய நான் என் தலைவராகிய உம்மோடு பேசுவது எப்படி? என்ன காரணம்? நான் பலம் இழந்து விட்டேன். என் மூச்சும் அடைத்துக் கொண்டது என்றார்.
இந்த தரிசனத்தின் வழியாக கடவுள் தாமே நிறுவப்போகிற விண்க அரசை, இறையரசை குறித்துச் சொல்லுகிறார். இதிலிருந்து கிறிஸ்து மனித குமாரன் என்ற பிரியமான பட்டத்தை தமக்கென்று தெரிந்து கொண்டார். தானியேல் தன்னைத் தாழ்த்தினார். கடவுள் தம் மகிமையைக் காண்பித்தார்.
தானியேல் ஆகமத்தில் காணப்படும் உருவகங்களில் கடவுளின் கோபம் அவரை எதிர்ப்பவர்கள் மீது வருகிறது. கடைசி நாளில் கடவுளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அழிக்கப்படுவார்கள் என்கிற செய்திகளை கூறுகிறது. பாவங்களால் ஏற்படும் துயரங்கள் என்றென்றும் நீடித்து நிலைக்கும். இறையரசு மலரும்போது அவை மறைந்துவிடும்.
கடவுளை காணவேண்டும் என்கிற ஆதங்கம் நம் மனதில் எழும்போது கடவுள் காட்சி தருகிறார். திருமறை எழுத்துகளில் கடவுளை காண்போம். இறையரசை பெறவேண்டும் என்கிற வைராக்கியத்தில் வாழ்வோம்.
கடவுளே! திருமறை எழுத்துக்களில் உம்மை காணவும், நித்திய வாழ்வின் நிச்சயத்தோடு வாழ்ந்து இறையரசில் இணைய உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.