மத்தேயு 10 : 28-31 27 ஜனவரி 2022, வியாழன்
“நீ எழுந்திருப்பதும் உட்காருவதும் என் கண்முன்தான். உன் போக்கும் உன் வரவும் எனக்குத் தெரியும்.” – 2 இராஜாக்கள் 19 : 27
பாம்பு ஒன்று தவளையைக் கண்டது. இன்று நல்ல வேட்டை என நினைத்தது. ஆனால் தவளையோ தப்பிக்க வழி வகைகளைச் சிந்தித்தது. திடீரென பக்கத்திலுள்ள ஆற்றுக்குள் தவளை குதித்தது; தப்பித்தது. சிறிய உயிரினமான இத்தவளைக்கே இத்தனை தைரியமானால், இறைவனின் பிள்ளையாகிய நான் ஏன் பயப்பட வேண்டும்?
அசீரியா நாட்டுப் பேரரசன் பெயர் சனகேரீப். அப்போது எருசலேமை ஆண்டவர் எசேக்கியா மன்னர். இவருக்கு எதிராக சனகேரீப் பேசிக் கொண்டிருந்தார். அகந்தையும் ஆணவமும் அவரிடம் மேலோங்கி நின்றது. அப்போதுதான் ஏசாயா தீர்க்கதரிசிக்கு இறை வார்த்தை வந்தது. சனகேரீப்பைப் பற்றி கர்த்தர் கூறிய சொற்கள்தான் இன்றைய தியானப்பகுதி. சனகேரீபின் ஒவ்வொரு அசைவையும் இறைவன் அறிவார். அவனது அகந்தை நிறைந்த சொற்கள் ஒவ்வொன்றையும் தேவன் அறிவார். “நான் உட்காருவதும் எழுந்திருப்பதும் உமக்குக் தெரியும்” என இறைவனைப் பற்றித் திருப்பாடகர் தெரிவிக்கின்றார்.
அசீரியா அரசனைக் கண்டு அவர் பேச்சைப் பார்த்து எசேக்கியா அரசர் பயந்தார். நான்கூட உலகைக் கண்டு பயன்படுகின்றேன். உலக சக்திகளின் சொற்கள் என்னை அஞ்ச வைக்கின்றன. நான் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு எதிராக எத்தனை சக்திகள் வேண்டுமானாலும் எழும்பட்டுமே! வீறாப்பான வார்த்தைகளை உரைக்கட்டுமே! நான் ஆராதிக்கின்ற கர்த்தரின் பார்வைக்கு எதுவுமே மறைந்திருக்கவில்லையே!
என்னைப் பார்க்கிறவரை நான் இங்கே கண்டு கொண்டேனே என்று சொல்லி தன்னோடு பேசின கர்த்தருக்கு, பார்க்கிற கடவுள் நீர் என்று பேரிட்டாள் அல்லவா ஆகார் என்ற பெண்!
கொடிய பகைவனாகிய சாத்தான் எனக்கு எதிராகச் செயல்படலாம். பிசாசை வென்ற என் இரட்சகர் இயேசுவின் இரத்தம் என்னை விடுதலையாக்கும்! நம்பிக்கையோடிருக்கிறேன். அல்லேலூயா!
கர்த்தாவே! எந்த நிலையிலும் நான் உமது பார்வைக்குள்தான் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் வாழ்ந்திட என்னை வழிநடத்தியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.