அப்போஸ்தலர் 20 : 19-21 14 ஜனவரி 2025, செவ்வாய்
“இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கேட்டுக்கொண்டார்கள்.” – யோவான் 12 : 21
இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று சிலர் கேட்டுக் கொண்டார்கள். லாசருவை உயிரோடு எழுப்ப நடக்கும் நிகழ்வுக்கு அவர் எருசலேமுக்கு வருகின்றார் என்று கேள்விப்பட்டனர். திரளான ஜனங்கள் குருத்தோலை பிடித்துக் கொண்டு புறப்பட்டு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தில் வருகிற இஸ்ரவேலின் இராஜா துதிக்கப்பட தக்கவர் என்று ஆர்ப்பரித்தார்கள். பண்டிகையை ஆசரிக்க வந்த கிரேக்கர்கள் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடம் ஐயா இயேசுவை காண விரும்புகிறோம் என்றார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் சொல்ல அந்திரேயா இயேசுவிடம் அறிவித்தான். இயேசு தான் மகிமைப்படும்படியான வேளை வந்தது என்று அறிந்து அங்கிருந்து மறைந்து போனார்.
தொடர்ந்து வரும் பகுதியில் ஜனங்களும் அதிகாரிகளும் அவரில் விசுவாசம் வைத்தார்கள் என்பதை வாசிக்க முடிகிறது. இயேசுவை தேட, காண தொடர விசுவாசம் தேவையாக உள்ளது. இந்த விசுவாசமே மானிட மகன் தேவகுமாரன் என்பதை நம்மை ஏற்றுக்கொள்ள செய்கிறது. அவரில் மட்டுமே முழு மானுடத்துக்கும் மீட்பு என்பதை உணரமுடியும்.
இதுவே அவரை தேடுவதின் நோக்கமாய் இருக்க வேண்டும். ஏனெனில் அவரை தேடுகின்ற அனைவரும் கண்டடைவார்கள் என்பதை அவரே தனது மலை பிரசங்கத்தில் விளக்கி காட்டியுள்ளார். அவரை தேடுகின்றவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. பால சிங்கம் குறைவடைந்து பட்டினி கிடக்கும். அவரை தேடுகிறவற்கு ஒரு நன்மையும் குறையாது என்பதையும் தாவீதின் அனுபவத்தில் பார்க்கின்றோம். அவர் சமூகத்தை நித்தமும் தேடி நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம்.
முதலாவது கடவுளின் ராஜ்ஜியத்தையும், நீதியையும் தேடுங்கள். இவை உங்களுக்குகூட கொடுக்கப்படும் என்பதே இயேசு கிறிஸ்து முழு மானுடத்துக்கு கொடுக்கும் அழைப்பு. அந்த அழைப்பை இன்று உனக்கும் எனக்கும் கொடுக்கின்றார்.
அன்புள்ள கடவுளே! கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்று உரைத்த உமது குமாரனிலும் எங்கள் மீட்பரிலும் விசுவாசம் வைக்க கிருபை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.