யோவான் 3 : 35-36                                23 அக்டோபர் 2022, ஞாயிறு

“குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனையுடைவன்.” – யோவான் 3 : 36

இயேசுவின் படத்தை மிதிக்க மறுத்ததற்காக 26 பேர் கொல்லப்பட்டார்கள். இது நடந்தது பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானில் இருந்த ஒரு தீவில் நடைபெற்றது. ஷோகன் என்ற பிராந்திய தலைவன் கிறிஸ்துவை விசுவாசிக்கறவர்களை வெறுத்தான். எனவே ஒரு தெருவில் இயேசுவின் படத்தைத் தரையில் வரைந்து அதின்மேல் எல்லாரும் நடக்கவேண்டும் என்று கட்டளையிட்டான். அவ்விதம் நடக்க மறுத்த 26 பேரை எல்லோரும் பார்க்க சிலுவையில் அறைந்து கொன்றான். மரிக்கும்முன் அந்த 26 பேரும் சொன்னார்கள், “நாங்கள் விசுவாசிப்பது இயேசுவை. அவர் வழியாக நாங்கள் நிலையான வாழ்வை பெற்றுள்ளோம். நாங்கள் மரித்தாலும் புது வாழ்வை பெற்றுக்கொள்வோம்” என்று கூறினார்களாம்.

தியானப் பகுதியில் இயேசு, குமாரனில் அதாவது தம்மில் விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவன் உடையவன் என்று குறிப்பிடுகிறார். இயேசு பிதாவாகிய கடவுளால் அனுப்பப்பட்டவர். பிதா குமாரனில் அன்புகூர்ந்து எல்லாவற்றையும் – முழு மனுகுலத்தையும் அவர் கையில் ஒப்புகொடுத்துள்ளார். எனவே இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.

நித்திய ஜீவன் என்பது கடவுளால் கொடுக்கப்படுகின்ற புது வாழ்வு. இயேசுவில் தரப்படுகின்ற பாவமன்னிப்பின் வாழ்வு. இவ்வாழ்வு கடவுளால் கொடுக்கப்படுகின்ற இலவசமான வாழ்வு. இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதினால் இந்த முடிவில்லா வாழ்வு அனைவர்க்கும் கொடுக்கப்படுகிறது.

இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது என்பது கடவுளின் வார்த்தையைக் கேட்பதும் – வாசிப்பதும் தொடர்ந்து இயேசுவே நமது வழி, நமது வாழ்வு என்று நம்புவதே ஆகும்.

அன்பானவர்களே இன்று மனிதர்கள் அழிந்துபோகும் வாழ்வுக்குக்காக ஓடுகிறார்கள். மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தனது ஜீவனை- ஆத்துமாவை நஷ்டப்படுத்திக்கொண்டால் இலாபம் என்ன என்று திருமறைச் சொல்லுகிறது. எனவே அன்புக்குரியர்களே இயேசுவை நோக்கி பாருங்கள். இயேசுவை விசுவாசிப்போம். நிலையான, மகிழ்ச்சியான வாழ்வை பெறுவோம்.

அன்பின் கடவுளே! உமது குமரன் இயேசுகிறிஸ்துவில் நித்திய வாழ்வை இலவசமாய் தருகிறவரே! உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இயேசுவில் நித்திய ஜீவன் பெற்று வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.