2 தீமோத்தேயு 4 : 2-8 21 நவம்பர் 2023, செவ்வாய்
“நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்;….அவனைப் பிதா கனம் பண்ணுவார்.” – யோவான் 12 : 26
1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் பர்த்தலோமியு சீகன் பால்க் என்ற லுத்தரன் மிஷனரி முதன் முறையாக இந்திய மண்ணில் தரங்கம்பாடியில் வந்து இறங்கினார். முதன்முதலில் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்த்த ஆற்றல் மிகு ஊழியக்காரர் அவர்தான். எப்போது கடவுளின் வார்த்தைகள் தமிழ் மொழியில் கிடைத்ததோ அன்று தமிழ் மொழி ஆசீர்வதிக்கப்பட்டது எனலாம். சீகன் பால்க் ஐயர் மரணத்தருவாயில் இருக்கும்போது தனது நண்பர் கிரவுண்ட்லரிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள்தான் இன்றைய தியானப்பகுதி. சீகன் பால்க் தொடங்கி வைத்த ஊழியங்களை இயேசு கிறிஸ்து நிச்சயம் விரும்பியிருப்பார்.
உண்மையான ஊழியக்காரர்கள் இயேசுவோடு என்றும் இருப்பார்கள். இயேசுவும் அவர்களோடிருப்பார். தொண்டு, சேவை அனைத்தும் கடவுளோடு சம்மந்தப்பட்டவை. ஒப்புக் கொடுத்தல், தியாகம் போன்ற வார்த்தைகளும் உண்மையான ஊழியக்காரருக்குச் சொந்தமானவை. கர்த்தர் இன்று கனம் பண்ணுவதற்காக ஊழியக்காரர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். அரசு நம்மை கௌவிரப்பதைப் பெரிதாக நினைக்கிறோம். கர்த்தர் கனப்படுத்துவதுதான் மிக உயர்ந்தது எனும் எண்ணம் உள்ளவர்களே கடவுள் பார்வையில் ஊழியம் செய்பவர்கள். ஊழியம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம் இயேசுவோடு இருக்கும் சிலாக்கியமே. தெசலோனிக்கேய சபையாருக்குப் பவுலடிகள் எழுதும் போது ‘இப்படியாக நாம் எப்போதும் ஆண்டவரோடு இருப்போம். இந்த வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்’ என்கிறார். ஆண்டவரோடிருக்கும் ஆசீர்வாதம் நமக்கு வேண்டுமெனில் ஊழியம் செய்ய நம்மை ஒப்புக் கொடுப்போம்.
நமக்கு நெருக்கமானவர்கள், பிரியமானவர்கள் எப்போதும் எந்த நிகழ்விலும் நம்முடன் இருக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. கடவுளுக்கு ஊழியம் செய்வதின் வழியாக இயேசு எப்போதும் நம்மோடு இருக்கிறார் அல்லவா! நமது ஊழியங்களில் இயேசு இருக்கிறார். இதற்கு ஒப்பு கொடுக்க நம்மை அழைக்கிறார். நம்மை விட்டுப் பிரியாத நேசர் இயேசு கிறிஸ்துவே. அவரது உறவில் மகிழ்ந்து வாழ்வோம்.
எங்களை விட்டுப் பிரியாத கடவுளே! நாங்கள் உம்மை விட்டு எச்சூழ்நிலையிலும் பிரியாதபடி காத்தருளும். அதற்குத் தடையாக இருக்கிற எல்லா தீமைகளையும் மாற்றியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.