2 தீமோத்தேயு 4 : 16-18 06 ஜூலை 2022, புதன்
“கர்த்தர் மீனுக்குக் கட்டளையிடவே அது யோனாவைக் கரையிலே கக்கி விட்டது.” – யோனா 2 : 10
சர்க்கஸ் ஒன்று மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் சிறப்புக் காட்சியாக சிங்கத்தின் வாயில் ஒருவர் தலையை நுழைத்து எடுக்கும் காட்சி அமைந்திருந்தது. ஏராளமான பேர் அதைக் கண்டு களித்தனர். பல நாட்களாக நடைபெற்ற அந்நிகழ்ச்சி ஒரு நாள் சோகத்துடன் முடிந்தது. அன்று சிங்கம் தன் வாயினுள் தலையை நுழைத்தவரைக் கொன்றது. பல நாட்கள் கீழ்ப்படிந்த அச்சிங்கம், ஒரு நாள் கீழ்ப்படிய மறுத்து தன் இயல்பான குணத்தைக் காட்டி விட்டது.
யோனா சம்பவத்தில் மீன் கடவுளின் கட்டளையைச் சரியாக நிறைவேற்றியதைப் பார்க்கிறோம். கடலில் தத்தளித்து உயிருக்குப் போராடிய யோனாவை மீன் காப்பாற்றி கரையில் சேர்த்தது. இது கடவுளின் கட்டளைப்படியே நடைபெற்றது. கடவுளின் கட்டளையை நிறைவேற்ற இயற்கையும், உயிரினங்களும் தவறுவதில்லை. மனிதர்கள் தான் பல பொழுதுகளில் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்ற விரும்புவதில்லை.
கடலில் இயேசுவும் சீடர்களும் சென்ற போது பயங்கர புயல் வீசியது. சீடர்கள் பயத்தினால் அலறியபோது இயேசு எழுந்து இரையாதே, அமைதலாயிரு என்றார். காற்றும் புயலும் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அமைதலாயின. கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பது தீமையில் போய் முடியும் என்பதை யோனா இறுதியாக அறிந்து கொண்டார். இயற்கையே கடவுளுக்குக் கீழ்ப்படியும் போது கடவுளின் ஊழியக் காரராகிய தான் கீழ்ப்படிய மறுப்பது சரியாயிருக்குமோ என்று உணர ஆரம்பித்திருந்தார். எனவே தான் இரண்டாவது முறை கர்த்தர் அவருக்குக் கட்டளையிட்ட போது வேறு வழியின்றி அவருக்குக் கீழ்ப்படிந்தார்.
நமது வாழ்விலும் இறைவனின் கட்டளையை மறந்து அல்லது கவனிக்காமல் சுய முடிவுகளின் படி ஓடிக் கொண்டிருப்போம். தொடர்ந்து ஓட இயலாத நிலை வரும் போது தான் இறைவனிடம் திரும்ப முயல்வோம். இது மனித பலவீனம். இதை மேற்கொள்ள இறைத்துணை நாடுவோம். இறைச்சித்தம் செய்யும் நம்மை இன்றைக்குத் துன்பத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் இறைவன், நம் வழியாகப் பிறரையும் காப்பாற்ற விரும்புகிறார். அழிவிற்கு தயாராக இருக்கும் மக்களை, வாழ வழியின்றித் தவிக்கும் எளியோரை இரட்சிப்பின் பாதைக்குள் கொண்டு வர நம்மை அனுப்புகிறார். யோனாவைப் போல் சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம். இறையுத்தரவுக்குக் கீழ்ப்படிவோம். கீழ்படிந்து கர்த்தரின் நாமம் மகிமைப்பட அவருக்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.
இரக்கமுள்ள கடவுளே! உமக்குக் கீழ்படிந்து உமது சித்தப்படியே இறைப்பணியைச் செய்யும் உணர்வைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.