எபேசியர் 5 : 8-11                                   19 ஆகஸ்ட், 2021 வியாழன்

“கடவுளே கிறிஸ்துவின் முகத்திலுள்ள அறிவாகிய வெளிச்சம் … எங்கள் இருதயங்களில் பிரகாசித்திருக்கிறார்.” – 2 கொரிந்தியர் 4 : 6

பவுல் தங்கள் ஊழியத்தைப் பற்றி விளக்கினார். அப்பொழுது ‘நற்செய்தி, வெளிச்சம்’ என்று குறிப்பிட்டார். அத்துடன் கிறிஸ்துவின் முகத்திலுள்ள அறிவே வெளிச்சமாக எங்கள் இதயங்களில் பிரகாசிக்கிறது என தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். நம்முடைய இதயங்களில் கிறிஸ்துவின் முக அறிவே, கிறிஸ்துவை அறிகிற அறிவே ஒளிரட்டும்! ஒளி வீசட்டும்!

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு கைப்பிரதியின் தலைப்பு ‘விஜயனின் இதயம்.’ அதில் இதயம் வரையப்பட்டிருக்கும். அந்த இதயத்தில் பல்லி, பூரான், பாம்பு, போன்றவற்றின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது இந்த உயிரினங்களின் தன்மைகளெல்லாம் அவ்விதயத்தில் இடம் பெற்றிருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
ஆரோனின் ஆசீர்வாதம் நாமறிவோம். அதில், ‘கர்த்தர் தமது முகத்தை உன் மேல் பிரகாசிக்கப் பண்ணி …. கர்த்தர் தமது முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி…’ (எண்ணாகமம் 6:25,26) என்ற ஆசிமொழி அடங்கியுள்ளது. நம் இதயங்களை இரட்சகர் இயேசு தமது முகத்தின் அறிவால், தன்னை விசுவாசிப்பதால், தன்னை அறிகின்ற அறிவால் தூய்மைப்படுத்துகின்றார். அப்போது நாம் அவரது வெளிச்சத்தைப் பிரதிபலிப்போம். வெளிச்சத்தின் பிள்ளைகளுக்குரிய உயரிய குணங்களை இன்றைய வாசிப்புப் பகுதி நமக்கு உணர்த்துகின்றது. வெளிச்சத்தின் கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். ஆண்டவருக்குப் பிரியமானது இன்னதென்று சோதித்தறியுங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன் பங்காளிகளாகாமல், அவற்றைக் கடிந்து கொள்ளுங்கள்.

இரட்சகர் இயேசுவிடம் நம் இதயங்களை ஒப்படைப்போம்! அவர் தமது அறிவை நமக்கு அருளட்டும்! அது நம் இதயங்களில் பிரகாசிக்கட்டும்! இந்த இறை அறிவின் ஒளி வழியே நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நன்மை பெறட்டும். இயேசுவை விசுவாசிப்போம். இயேசுவால் பிரகாசிப்போம்.

மகிமையின் கர்த்தரே! என் இதயத்தை உம்மிடம் தருகின்றேன். உம்மை அறிகின்ற அறிவாம் ஒளியால் அடியேனின் இதயத்தில் பிரகாசித்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.