யோவான் 1 : 10-14                           01 டிசம்பர் 2022, வியாழன்

“உன் சந்ததி பூமியின் தூளத்தனையாயிருக்கும்; ……. உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.”   – ஆதியாகமம் 28 : 14

முன்பு ஆபிராம் என்றும், இப்போது ஆபிரகாம் என்றும் அறியப்படுகிற மனிதனின் வழித்தோன்றலாக அல்லது சந்ததியாகவே இயேசு வந்தார். பூமியின் வம்சங்களெல்லாம் அதாவது உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆசீர்வாதமாயிருப்பார் என்று கடவுளால் கூறப்பட்டவர் இவரே. ஆனால் ஆபிரகாமின் சந்ததி என்று கூறப்படுவதன் பொருள் என்ன?

இதுவரை தந்தையாகாதிருந்த ஒரு மனிதனின் குழந்தையாக இருக்கவேண்டும். இயேசு ஒரு அற்புத குழந்தை. கடவுளின் வாக்குத்தத்தத்தால் பிறந்த குழந்தை. எத்தனை பெரிய சவாலையும் சந்தித்து வளருகிற இயேசு குழந்தை அற்புதம் அல்லவா?

ஆனால் இதைவிடவும் பெரிதான அர்த்தம் இதற்குண்டு. அதாவது இயேசு விசுவாசத்தில் பெயர் பெற்ற ஆபிரகாமின் சந்ததியாவார். கடவுள் சொன்னார் என்பதற்காக தனது ஆஸ்தி, சம்பாத்தியம் அனைத்தையும் உதறி எறிந்தார். கடவுளின் பெரிய வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று நம்பி, அதைக் காண நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்ஆபிரகாம். இயேசு அதையே செய்தார். உண்மையாகவே, மண்ணில் மனிதனாக வரவேண்டும் என்று விண்ணிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தவர். ஏன் எதற்காக? ஏனென்றால் பிதாவாகிய கடவுள் அதைக் கேட்டார்.

மனுக்குலத்திற்கு ஏற்பட்ட சாபத்தினின்றும், அதன் விளைவான சாவு, அந்தகாரம் ஆகியவற்றின் அதிகாரத்தினின்று, அவற்றின் கோரப்பிடியிலிருந்து முழு மனுக்குலத்தை மீட்டு விடுதலை வழங்கும் ஆசீர்வாதம் இயேசுவின் வழியே நமக்குக் கிடைத்தது. இதை அவர் தமது சொந்த ஜீவனைக் கொண்டு அவருடைய சாவு மற்றும் உயிர்ப்பினால் நிறைவேற்றினார்.

இயேசு கிறிஸ்துவினால், இன்று உலகில் வாழும் அனைத்து குடும்பங்களும் கடவுளின் குடும்பத்தார் என்ற சிலாக்கியத்தைப் பெற்றுள்ளோம். பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து, கடவுளின் சந்ததியாக மாறும் சிலாக்கியம் இது. அவருடைய வருகையை முன்னறிந்து ஆபிரகாமே மகிழ்ச்சியடைந்தார் என்று இயேசுவே கூறுகிறார். விலை மதிப்பற்ற இந்த ஆசியில் நாமும் மகிழ்ந்திருப்போம்.

அன்பின் பரலோகப் பிதாவே! எங்களையும் உமது பிள்ளைகளாக மாற்றிட உதவிய உமது நேசக்குமாரன் இயேசுவுக்காய் உமக்கு நன்றி சொல்லுகிறோம். இயேசுவின் வழியே. ஆமேன்.