2 தெசலோனிக்கேயர் 2 : 14-15 03 அக்டோபர் 2022, திங்கள்
“சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.” – 2 தெசலோனிக்கேயர் 2 : 14
Call letter அல்லது Offer letter என்பது ஒரு நபருக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து வரும் வேலைக்கான அழைப்புக் கடிதம். அக்கடிதம் பெற்றுக் கொண்ட நபருக்கு சந்தோசத்தையும் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.
தியான பகுதியில், இயேசுகிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பைப் பெறுவதற்கான அழைப்பைக் குறித்து சொல்லுகிறார் பவுல்.
கடவுள் தமக்கென்று ஒரு ஜனத்தைத் தெரிந்துக் கொள்ள ஆபிரகாமை அழைத்தார். அழைக்கப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க மோசேவை அழைத்தார். கடவுள் தமது குமரனின் சுவிசேஷத்தைக் கொண்டு இரட்சிப்பின் வாழ்விற்கு நம் யாவரையும் அழைக்கிறார். கடவுளின் அழைப்பு என்பது மனுக்குலத்திற்கு தரப்படும் ஊயடட டநவவநச. அவரின் மகிமையைப் பெற்றுக்கொள்ளத் தரும் வாய்ப்பு. கடவுள் தமது வார்த்தையானவரை இவ்வுலகத்திற்கு அனுப்பினார். வார்த்தையான இயேசு தமது சிலுவைப் பாடு, மரணத்தினால் இரட்சிப்பைச் சம்பாதித்தார். இயேசுவே நற்செய்தி – சுவிசேஷம். கடவுள் இயேசுவில் இந்த இரட்சிப்பைத் தருகிறார். அந்த இரட்சிப்பின் வாழ்வை பரிசுத்தாவியானவர் சுவிசேஷத்தைக்கொண்டு நம்மை அழைக்கிறார். சுவிசேஷத்தைக் கேட்டு இயேசுவில் விசுவாசம் கொள்கிறவர்களுக்கு இரட்சிப்பின் வாழ்வைக் கடவுள் தருகிறார். கடவுளின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்ளுகிறார்.
தெசலோனிக்கேயத் திருச்சபையை சுவிசேஷத்தைக் கொண்டு இரட்சிப்புக்கு அழைத்த கடவுள் இன்று நம்மையும் அழைத்திருக்கிறார். இரட்சிப்பின் அழைப்பைப் பெற்ற நாம் நமது அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ கடவுள் விரும்புகிறார். மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும் ,நீடிய பொறுமையோடும், அன்பில் ஒருவரையொருவர் தாங்கி வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கேட்போம். இயேசுவின் மகிமையைப் பெறுவோம். அழைப்பில் நிலைத்திருப்போமாக!
இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கொண்டு எங்களை இயேசுவின் மகிமையை பெற்றுக்கொள்ள அழைத்த கடவுளே உமக்கு தோத்திரம். உம்முடைய அழைப்பில் நிலைத்து வாழ உதவி புரிந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.