எபேசியர் 2 : 13-22 30 ஜூலை 2024, செவ்வாய்
“அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல.” – அப்போஸ்தலர் 17 : 27
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பேருந்தில் புறப்படுகிற 50 பேருக்கும் சென்னை ஒரே தூரம்தான். வித்தியாசம் கிடையாது.
கடவுள் நம் யாருக்கும் தூரமானவர் இல்லை. ஒன்று, இரண்டு பேர்கள் என் நாமத்தில் எங்கு கூடுவீர்களோ, அங்கு நான் இருக்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.
ஒரு காலத்தில் தகவல் தொடர்பு கடினமானதாக இருந்தது. உறவினர்களை பார்க்க செல்வது என்றால் இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்து பார்க்க செல்ல வேண்டும். ஆனால் அறிவியல் வளர்ச்சியால் செல்போன் மற்றும் ஊடகங்கள் வழியாக ஒரே நிமிடத்தில் பார்த்து விடுகிறோம். உலகத்தை சுருக்கி தூரமானவைகளை அருகில் வர செய்து விட்டோம். இதுவும் கடவுளின் ஆசியே.
நாம் பாவத்தால் கடவுளைப் பிரிந்து தூரத்தில் வாழ்ந்தவர்கள். கடவுளுக்கும் நமக்கும் இடைவெளி காணப்பட்டது. ஆதாம் ஏவாள் பாவத்தில் விழுந்தது முதல் நாம் கடவுளின் மகிமையை விட்டு தூரமாய் போனோம். ஆனால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் நம்மை மீண்டும் கடவுளுடன் இணைத்துவிட்டது.
நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறார் என்று இயேசு கூறுகிறார். மேய்ப்பன் என்பவன் தன் ஆடுகளை விட்டு தூரமாக போக முடியாது. ஆடுகள் மேயும் எல்லைக்குள் மேய்ப்பன் இருக்கவேண்டும். அதுபோல் நாம் அவரின் பிள்ளையாய் அவரின் கண்களுக்கு அப்பால் போகாமல் அவருடைய மந்தையில் இணைந்திருப்போம்.
நாம் பாவம் செய்யும் போதெல்லாம் கடவுளை விட்டு தூரமாக போகிறோம் என்பதனை உணர்வோம். நம்முடைய செயல்களால், சிந்தனைகளால் கடவுளின் விருப்பதிற்கு மாறாக வாழ்ந்து தூரப்படுகிறோம். ஆனால் கடவுள் நம்முடன் இருந்து நம்மை காக்கிறார் என்பதை அறிவோம். கடவுள் நம்மோடு இருப்பதினால் அவர் கிருபை இருப்பதினால் நாம் திரும்பத் திரும்ப மன்னிக்கப்படுகிறோம். புதுவாழ்வு பெறுகிறோம்.
எங்களை மீட்டு எங்களோடிருக்கும்படி இயேசுவில் எங்களைத் தேடி வந்த கடவுளே! நீர் எங்களோடிருக்கிறீர் என்ற நிச்சயத்தில் வாழ வழிநடத்தும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.