சங்கீதம் 99 :1-5                                   12 செப்டம்பர் 2023, செவ்வாய்

“நிம்சியின் குமாரன் யேகூவை இஸ்ரவேலின் மேல் …அபிஷேகம் பண்ணு.” – 1 ராஜாக்கள் 19 : 16,17

ராஜாக்களின் சர்வாதிகார ஆட்சியானாலும், ஜன நாயக ஆட்சியானாலும் ஆட்சியாளர்கள் மாற்றப்படுவது காலா காலமாக நாம் கண்டு வரும் உண்மை. மனிதர்களின் இராஜ தந்திரங்களும், ஓட்டுரிமைகளும் தான் இந்த மாற்றங்களுக்குக் காரணமா? இல்லை. சர்வ சிருஷ்டிகள், நாடுகள் மேலும் ஆளுகை செய்து வரும் இறைவன் தான் அரசியல் மாற்றங்கள் வழியாக தமது சித்தத்தைச் செய்கிறார்.
இன்றைய தியான வசனங்களின் பின்னணியைச் சற்று ஆராய்வோம். இஸ்ரவேலை ஆண்டு வந்த ஆகாப் ராஜா இறைவனின் கட்டளை களுக்கும், சித்தத்துக்கும் எதிராக நடந்தார். இதனால் கடவுள் சினங் கொண்டார். ஆகாப் ராஜாவை நீக்கி விட்டு புதிய அரசனை அமர்த்த எண்ணினார். கர்த்தர் மந்திர சக்தியினால்

மாற்றங்களைக் கொண்டு வருகிறவர் அல்ல. அந்தந்த காலங்களில் வாழும் மனிதர்களையும், அரசியல் சூழ்நிலைகளையும் தனது செயல்பாடுகளுக்குக் கருவிகளாக் குகிறார். கடவுள் இஸ்ரவேல், சிரியா நாடுகளின் ராஜாக்களை மாற்ற விரும்பினார். தீர்க்க தரிசியையும் மாற்ற எண்ணினார். அதன்படி சில மாற்றங்களை ஏற்படுத்துகிறார். இந்த நியமனங்கள் யாவுமே இறைவனால் பிறப்பிக்கப்பட்டு எலியாவால் செயலாக்கம் பெறுகின்றன.

உலகில் அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது ஆண்டவனின் அழிக்கும் கரம் நீளுகிறது. நோவாவின் காலத்தில் மனிதரின் பாவங்கள் பெருகிய போது பெருமழையால் தண்டித்தார். பாபேல் கோபுரம் கட்டி கடவுளுக்கும் மேலாகத் தங்களுக்குப் பேர் உண்டாக்க நினைத்தவர்களை மொழி மாற்றம் வழியாகச் சிதறடித்தார். இன்றைய உலகின் அரசியல் மாற்றங்களும் இறைவனின் சித்தத்துக்குட்பட்டுத்தான் நடக்கின்றன என்பதை உணருவோம்.

கடவுள் இரக்கம் மிகுந்தவர், கிருபை உள்ளவர் என்பது மட்டுமல்ல, அவர் அநீதியை அந்தந்த காலங்களில் அழிக்க வல்ல நீதிபரர். அக்கிரமங்கள் அளவுக்கு மீறினால் அரசர்களை மட்டுமல்ல, யாரையும் தண்டிக்க இறைவன் ஆயத்தப்படுகிறார். அதே சமயம் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்பவர்களை இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு வழியாக மன்னித்து புது வாழ்வு கொடுக்கிறார். நாம் தவறுகளில் நிலையாக நிற்காமல் மனந்திரும்ப வேண்டுமென்பதற்காகத் தான் கடவுளின் தண்டனைகளைப் பற்றியும் வேதம் நம்மை எச்சரிக்கிறது. வசனம் தரும் எச்சரிக்கைகளைக் கவனித்து கர்த்தரின் சித்தம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.

நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரே, நீர் எங்களுக்குத் தந்திருக்கும் பொறுப்புக்கள் உமது அருட்கொடைகள். உமக்குப் பிரியமான வழிகளில் தொடர்ந்து நாங்கள் பணி புரிய அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.