யோவான் 3 : 16-17                                 28 நவம்பர் 2022, திங்கள்

“தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.” – மாற்கு 1 : 1

மாற்கு சுவிசேஷத்தின் ஆசிரியரான மாற்கு தனது சுவிசேஷத்தை எத்தனை எளிய முறையில் தொடங்குகிறார் பாருங்கள். தனது தலைப்பாக அவர் கூறுகிறார். `சுவிசேஷம்’ அதாவது இயேசுவைப் பற்றிய `நற்செய்தி’. இயேசு யார்? கிறிஸ்துவாகிய இயேசு அதாவது மேசியா அதாவது நாம் அனைவரையும் மீட்டு இரட்சிப்பதற்காக, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுளால் வாக்களிக்கப்பட்டவர். இப்போது சொல்லுங்கள், யார் அவர்? இறைவனின் திருமைந்தர். கடவுளே மனுவடிவில் வந்திருக்கிறார். ஒரு சின்னஞ்சிறிய குழந்தையாக, மாட்டுத் தொழுவின் புல்லணையில் படுத்துறங்குகிறவராக சிலுவையில் தொங்குகிற ஒரு மனிதனாக, உண்மையாகச் சொல்வதானால் இது ஒரு சுலபமான காரியமல்ல.

மேலே சொல்லப்பட்ட அனைத்து சம்பவங்களும் ஒரே இலக்கை நோக்கியே பொங்கி வழிந்தோடுகிறது. அது அன்பு கூருதலே. கடவுள் அதாவது, இந்த உலகையும் இதில் காணும் அனைத்தையும், அண்ட சராசரங்களையும் படைத்த இறைவன் இறங்கி வர தீர்மானித்தார். குழப்பமான, வம்பும் தும்பும் நிறைந்த நமது அன்றாட வாழ்வின் சாதாரண எளிய சூழ்நிலைக்குள், ஒரு குழந்தை வடிவமெடுத்து மண்ணுலகிற்கு வந்தார். கடவுளே, நம்மில் ஒருவராக நம்மிடையே வாசம் செய்ய வந்தார்.

ஒருவருக்கு நமது அன்பைக் காட்ட வேண்டுமானால் அதற்குப் பல வழிகள் உள்ளன. வெகுதொலைவில் வாழ்ந்தாலும் கூட கடவுளுக்கும் இது பொருந்துமல்லவா. அவர் நினைத்திருந்தால் ஒரு தேவ தூதனை அனுப்பியிருக்க முடியும். தூரத்திலிருந்து கொண்டே அவருடைய ஆசீர்வாதங்களை நம்மீது பொழிந்திருக்க முடியும். திருமறை வரலாற்றில் நாம் காண்பது போல ஒரு தீர்க்கதரிசியை நம்மிடையே அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை, மாறாக அவரே நம்மை நாடி வந்தார்.

இயேசு இவ்வுலகில் வந்தபடியினால், எல்லாமே மாறிப்போனது. இந்த செய்தி சுவிசேஷத்தின் ஆரம்பமானதால், நல்ல செய்தியின் ஆரம்பமாயிற்று. இது எனக்கும், உங்களுக்கும், உலக மாந்தர் அனைவருக்கும் சொந்தம். என்றென்றைக்கும் நிலைக்கும் நல்ல செய்தி.

ஆண்டவரே, உம்மையே எங்களது புதிய துவக்கமாகத் தந்தீர், உமக்கு நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.