மாற்கு 5 : 21-43 07 அக்டோபர் 2020, புதன்
“மகள் மரண அவஸ்தையில் இருக்கிறாள்; அவள் குணமாகிப் பிழைக்கும் படி …அவள் மேல் உமது கைகளை வைத்தருளும்.”- மாற்கு 5 : 23
யூதர்களுக்கு எருசலேமில் பெரிய அழகிய ஆலயம் இருந்தது. உலகில் எங்கெல்லாம் யூதர்கள் வாழ்ந்தார்களோ, அங்கேயெல்லாம் ஒரு தொழுகைக் கூடத்தைக் கட்டி இறைவனைத் தொழுது வந்தார்கள். ஒரு தொழுகை கூடத்தில் ஒரு தலைவரும், ஒரு ஆட்சியாளரும் இருப்பார்கள். இத்தகைய ஒரு தொழுகைக் கூடத்தின் தலைவர் தான் யாவீரு. இவர் மக்களால் மதிக்கப்பட்டவர். யவீருவிற்கு பன்னிரெண்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். அவள் நோயால் பீடிக்கப்பட்டு சாகும் தருவாயில் இருந்தாள். யவீரு தொழுகைக் கூட தலைவராய் இருந்தபடியால் அவரிடம் பணம் இருந்தது, ஆட்கள் இருந்தார்கள், அதிகாரம் இருந்தது. இயேசுவை தனது வீட்டிற்கு அழைத்திருக்கலாம். ஆனால் யவீரு இயேசு இருக்கும் இடத்துக்கு சென்றார். எல்லோரும் கேட்பது போல இயேசுவிடம் கேட்டார். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும். அப்பொழுது அவள் சுகம் பெறுவாள் என்றார். தனது பதவியைப் பற்றியோ கௌரவத்தைப் பற்றியோ, சுற்றி நின்ற மக்களைப் பற்றியோ கவலைப்படாமல், இயேசுவை மிகவும் வேண்டிக் கொண்டார். இயேசு வீட்டிற்கு வரும் முன் குழந்தை இறந்து போனது என்ற செய்தி வந்தது. இதைக் கேட்ட இயேசு யவீருவைப் பார்த்து, பயப்படாதே, நம்பிக்கையுள்ளவனாக இரு என்றார். அவன் வீட்டிற்கு சென்றார். பிள்ளையின் கையைப் பிடித்து `தலித்தா கூம்’ என்றார். அதற்கு சிறு பெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம். உடனே சிறு பெண் உயிர் பெற்று எழுந்தாள். எந்த ஒரு தந்தையும் தன் பிள்ளை மரண தருவாயில் இருக்கும்போது சும்மா இருக்க மாட்டார். ஜெப ஆலயத் தலைவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
நாம் பெரிய பொறுப்புகளில் பதவியில் இருக்கலாம். ஆண்டவரின் வல்லமையின் முன் அவை ஒன்றுமேயில்லை என்பதை புரிந்து கொள்ளுவோம். வறட்டு கௌரவத்தை விட்டு இறைவனை நம்பி வாழுவோம். நமது மன்றாட்டுகளை இறைவன் கேட்கிறார். நிச்சயம் நமது மன்றாட்டுகளுக்கு பதில் உண்டு. ஏனெனில் இறைவன் நமது உணர்வுகளை அறிகிறவர். நாம் இயேசுவில் வைக்கிற விசுவாசத்தில் இறைவனின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஒரு தந்தையாக இறைவன் நமக்கு புது வாழ்வு அருளுகிறார். நமது இறை விசுவாசம் தான் நமது வாழ்வில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது என்பதற்கு இவ்வரலாற்றுப் பதிவுகள் சான்று பகருகின்றன. நமது இறை விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
எல்லாம் வல்ல இறைவனே! நம்பிக்கையற்று மரித்துப்போன நிலையில் இருக்கும் எங்களை உயிர்ப்பித்து சாட்சியாக நிறுத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.