லூக்கா 7 : 11-17 19 அக்டோபர் 2020, திங்கள்
“ஆண்டவர் அவளைப் பார்த்து அவள் மேல் மனமுருகி அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து பாடையைத் தொட்டார்.” – லூக்கா 7 : 13
பல காரணங்களுக்காக நாம் அழுகிறோம். வியாதிகள் இழப்புகள், கடன் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள், சஞ்சலங்கள், போராட்டங்கள், நிந்தைகள், அவமானங்கள், மரணம் போன்றவை வரும்போது கண்ணீர் விடுகிறோம். தாங்கொண்ணா வேதனை அடைகிறோம்.
கப்பர்நகூமுக்கு தென்மேற்கில் இருக்கிறது நாயீன் என்னும் ஊர். கப்பர்நகூமிலிருந்து நாயீன் ஊருக்கு செல்லும் வழியில் ஏராளமான கல்லறைக் குகைகள் இன்றும் இருக்கின்றன. அங்கே ஒரு கைம்பெண் இருந்தாள். அவளுக்கு ஒரே மகன். அவன் இறந்து போனான். இறந்தவனை அடக்கம் பண்ண பாடையை சுமந்துகொண்டு மக்கள் கூட்டமாக கல்லறைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இயேசு எதிரே வந்தார். தலைவிரி கோலமாக கதறி அழுது கொண்டு வந்த கைம்பெண்ணைக் கண்டார். கணவனை இழந்தவள் தன் மகனைக் கண்டு ஆறுதலும், தேறுதலும் அடைந்து வந்தாள். தற்போது அந்த ஒரே மகனும் இறந்துவிட்டான். இந்த இழப்பை அவளால் தாங்க முடியவில்லை. அவள் எதிர்காலம் கேள்வி குறியாயிற்று. இயேசு இப்பெண் சந்தித்த வேதனையையும், ஏக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்தார். அவள் மீது மனதுருகினார். அந்தப் பெண்ணைப் பார்த்து, அழாதே என்றார். கிட்ட வந்தார். பாடையைத் தொட்டார். சுமந்தவர்கள் நின்றார்கள். இயேசு ‘வாலிபனே எழுந்திரு’ என்றார். மரித்தவன் உயிரோடு எழுந்தான், பேசினான். அவனைத் தாயாரிடம் ஒப்புவித்தார். அவளைத் தேற்றினார். அவளுக்கு வாழ்வு அருளினார். மகிழ்ச்சியோடு வாழ உதவி செய்தார். இயேசுவின் மகத்துவத்தை மக்கள் கண்டனர்.
நாமும் நமக்கு அன்பானவர்களை இழந்து கொடுந்துயரத்தில் இருக்கலாம். வாலிபர்களோ, வயதானவர்களோ, குழந்தைகளோ, நண்பர்களோ, இவர்களது இழப்பில் சில நிகழ்வுகளை மறக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோமா? கவலைப்பட வேண்டாம். இழப்புகள் மத்தியில் ஆறுதல் தருகிற ஆண்டவர் இயேசு நம்மோடிருக்கிறார். அழவேண்டாம். மரணம் இயற்கையானது, இயல்பானது, தவிர்க்க முடியாதது. மரணத்தைக் கண்டு கலங்க வேண்டாம். மரித்து உயிர்த்த ஆண்டவர் நம்மோடிருக்கிறார். அவரில் ஆறுதல் அடைவோம். இறைவன் நம்மை தம் வசனங்களைக் கொண்டு தேற்றுகிறார். மரணத்தின் வழியாகவும் நாம் இறைவனோடு இணைவோம். இழப்புகள் மத்தியில் நம் கண்ணீரைத் துடைக்கிற இறைவனை நம்பி வாழுவோம். இறைவனின் வார்த்தையில் நிலைநிற்போம். புதுவாழ்வும் நம்பிக்கையும் பெறுவோம்.
மனதுருக்கமுள்ள இறையவரே, உலர்ந்து போன எலும்புகளுக்கு உயிரூட்டுகிறவரே, ஆன்மீக வாழ்விலும், சரீர வாழ்விலும் நம்பிக்கை இழந்த எங்களை உயிர்ப்பியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.