லூக்கா 23 : 33-35 21 மார்ச், 2020-சனி
“கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்திற்கு அவர்கள் வந்தபோது, அங்கே அவரை……… சிலுவைகளில் அறைந்தார்கள்.” – லூக்கா 23 : 33
மலைகளிலும், அலைகளிலும், கலைகளிலும் கடவுளையும் அவர் வல்லமையையும் காணும் பக்தர்கள் மிகவும் உயர்ந்த விசுவாசத்தோடு இருப்பார்கள் என்பது உண்மைதானே!
மலைகளின் மேல் கோவில்களை அமைப்பதை நமது முன்னோர்கள் தமிழ்நாட்டில் வழக்கமாக வைத்திருந்தார்கள். காரணம் கடவுளைத்தேடி, நடந்து, மலை ஏறினால் அவரது காட்சியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது அக்காலத்து நம்பிக்கையாய் இருந்தது.
திருமறையில்கூட சீனாய் மலை, கார்மேல் மலை, ஒலிவமலை, சீயோன்மலை, கல்வாரிமலை இவை இறைவனின் திருக்காட்சியகங்களாக காட்டப்பட்டுள்ளன. எனினும் கல்வாரி மலை அனைத்து மலைகளிலும் வேறுபட்டது. காரணம் இம்மலை குற்றவாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது. இந்த மலையில்தான் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இயேவுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனையும் கல்வாரி மலையில்தான் நிறைவேற்றப்பட்டது. கல்வாரி என்றதும் இயேசுவும் அவரது சிலுவையும் வந்து நம் உள்ளத்தை வாட்டவில்லையா? அன்பின் சிகரத்தைக் காட்ட சிலுவைக் காட்சிபோல் ஒரு காட்சி இந்த உலகம் கண்டதுண்டா?
விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையில் இயேசுவின் உடல் தொங்குவதைத் தாங்கிநின்ற மலைக்கு நேராக நம் கண்களை ஏறெடுப்போம். ஏனெனில் நமக்கு இரட்சிப்பு, விடுதலை, மீட்பு அங்கிருந்துதான் வருகிறது. கல்வாரி மலை நாதராம் இயேசுவை நோக்கிப் பார்ப்போம் அவரையே பாடுவோம்! மாறுவோம் இரட்சிப்பு பெறுவோம்.
உயர்ந்த கடவுளே! சிலுவை மலையை நோக்கிப் பார்த்து உமது அன்பிற்கு நன்றி படைக்கின்றோம். சிலுவையில் காணும் அன்பு எங்களை காக்கட்டும். இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.