யோவான் 11 : 23-26 12 ஜூலை, 2018 வியாழன்
“உயிர்த்தெழுதலும் ஜீவனும் நானே.” – யோவான் 11 : 25
`உயிர் கூக்குரலாலே கிடைக்காது. அது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது. அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது’ என்று மரணத்தை குறித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
மரணமே ஒரு மனிதனின் கடைசி நிலை. அதற்குபின் உடல் எங்கே? உயிர் எங்கே? அவன் எங்கே என்பது தான் மௌனக் கேள்விகளாக வலம் வருகின்றன. இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த பின்னர்தான் மரணத்திற்கு முடிவு வந்தது. வாழ்க்கை இன்னும் தொடரும் என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டது.
இயேசு உயிர்தெழுவதற்கு முன்னமே இறந்தவர்கள் மூன்று பேரை உயிரோடு எழுப்பினார். யவீரு என்பவனின் மகள், நாயீன் ஊர் வாலிபன் உறவினன் லாசரு இவர்கள் இயேசுவின் இரக்கத்தால் மரித்த பின்னர் மீண்டும் உயிர்பெற்றனர். மரணத்தின்மேல் அதிகாரம் பெற்றவர் இயேசு கிறிஸ்து ஒருவரே என்பதை இந்த நிகழ்வுகள் தெளிவுபடுத்தின.
இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் உள்ளோர் இந்த உயிர்த்தெழுதலைப் பெற்றுக் கொள்வார்கள். மரணம் அடைந்தோர் அனைவரும் எழுந்திருப்பார்கள் என்று திருமறை திட்டமாக கூறுகிறது. இதற்கு இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆதாரமாக அமைந்தது. இயேசு கிறிஸ்துவில் கடவுளின் பிள்ளைகளாகிய நாம் நிரந்தரமானவர்கள். நமக்கு நித்திய மரணமில்லை. நித்திய காலமாக கடவுளோடு வாழப் பிறந்தவர்கள். எனவே உயிர்ப்பயம், மரணத்தைக் குறித்த சந்தேகங்கள் மரணம் எந்நேரம் வருமோ என்று கலங்கிக் கொண்டிருப்பது தேவைதானா? நம்முடைய உயிர் கடவுள் தந்தது. அவர் தந்த உயிர் அவருக்குரியதாவே இருக்க வாழ்வோம். கடவுள் இன்றும் என்றும் நம்மைக்காப்பாராக.
எங்கள் வாழ்க்கையின் ஆதாரமும் எங்கள் ஜீவனுக்கு அரணுமாய் இருக்கிற கடவுளே! மரணம் குறித்த பயமில்லாமல் வாழ உதவி செய்வீராக. உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கையை எங்களுக்குத் தந்ததற்காக நன்றி. இந்த நம்பிக்கையில் நிலைத்து வாழ உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.