எபேசியர் 6 : 1-4 16 பிப்ரவரி, 2020-ஞாயிறு
“ …வறண்ட தென்னாட்டிலே என்னைக் கொடுத்து விட்டீர். நீரூற்று நிலத்தை எனக்குத்தர வேண்டும்.” – நியாயாதிபதிகள் 1 : 15
வீரத்துக்கு பேர் பெற்ற தமிழர் சமூகத்தில் ஒரு காலத்தில் சிலர் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை தேட போட்டிகள் நடத்துவார்கள். காளைகளை அடக்கும் வீரருக்கு பணமுடிப்போடு தன் மகளையும் திருமணம் செய்விக்கும் பெற்றோரை குறித்து நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அப்படி வாக்கு கொடுக்கும் தந்தையின் விருப்பப்படி தங்கள் கழுத்தை நீட்டும் வீரமங்கைகள் குறித்து தமிழர் வரலாறு பறை சாற்றுகிறது.
திருமறையில் காலேப்பு என்பவர் தன் மகளை இவ்வாறே மணமுடித்து கொடுத்தார். அக்காலத்தில் இஸ்ரவேலர் போரிட்டு தங்களுக்குரிய தேசத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது கிரியத் சேபர் என்னும் இடத்தை போரிட்டு வெற்றி பெறுவோனுக்கு தன் மகள் அக்சாளை மணமுடித்து வைப்பேன் என்று வாக்குக் கொடுத்தார். ஒத்னியேல் என்பவர் போரிட்டு வெற்றி பெற்றார். காலேப்பு தாம் வாக்கு கொடுத்தபடியே தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அக்சாளும் அவரை தன் கணவராக ஏற்றுக் கொண்டாள். பிறகுதான் அக்சாளுக்கு தான் மணம்முடித்து கொடுக்கப்பட்ட இடம் வறண்ட நிலம் என்று தெரிந்தது. அவள் தன் தந்தையிடம் இப்படிச் செய்து விட்டீர்கள் என்று கோபப்படாமல் எனக்கு நீரூற்று நிலத்தைத் தாரும் என்று வேண்டுகோள் வைத்தாள். மகளின் கோரிக்கை நியாயமானது என்றறிந்து அவளுக்கு நீரூற்று நிலத்தை காலேப்பு கொடுத்தார். அக்சாள் பெற்றோருக்கு ஏற்ற மகள். கீழ்ப்படிதலுள்ள பெண். தன்னுடைய விருப்பமல்ல பெற்றோருடைய விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்தாள். எதைச் செய்தாலும் பெற்றோர் தனக்கு நன்மையைத் தான் செய்வார்கள் என்று நம்பினாள். தனக்கு குறைவு ஏற்பட்டதை அறிந்த போது தந்தையிடமே கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.
நம் தந்தையாம் இறைவனோடு நமக்கு எத்தகைய உறவு இருக்க வேண்டுமென்பதற்கு அக்சாள் நல்ல உதாரணம். கடவுள் இயேசுவில் நம் தந்தையாம் இறைவனிடம் நம் குறைகளைச் சொல்லி அதை நிறைவாக்குவோம். ஒரு தகப்பனாக நம் தேவைகளை அறிந்த அவர் அதை நமக்கு அருளுவார்.
பரம பிதாவே! எங்கள் தேவைகள் என்னவென்று அறிந்திருக்கிறீர். உமது விருப்பப்படி எங்களை வறட்சியான இடத்தில் அல்ல செழிப்பான இடங்களில் வாழத் துணைபுரியும். வறட்சியைச் செழிப்பாக்கும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
