ஏசாயா 9 : 5-7 06 ஜனவரி 2025, திங்கள்
“எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தரின் மகிமை உன் மேல் உதித்தது. இதோ, இருள் பூமியை மூடும், ….. ஆனால் கர்த்தர் உன் மீது உதிப்பார்.” – ஏசாயா 60 : 1, 2
இருள் என்று புலம்பிக் கொண்டிருந்த மக்கள்மீது ஒளி வீசுகின்றது. இது சாதாரண ஒளி அல்ல ஆண்டவரின் நித்திய ஒளி, மகிமையின் ஒளி. எனவே சீயோனை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி மண்ணில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றவர்களை பார்த்து எழும்புமாறு அழைப்பு வருகின்றது. கடவுள் அருளும் ஒளியாய் எழுந்து பிரகாசி என்பது கடவுளின் இரட்சிப்பை, மீட்பை விடுதலையைக் குறிக்கும் பொருளாக சொல்லப்படுகின்றது.
ஏசாயா தீர்க்கர் கடவுளின் மகிமையை ஆலய பிரகாரங்களில் கண்டு பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்றும் சேராபீன்கள், கேருபீன்கள் மத்தியில் மகிமையில் வீற்றிருப்பவர் என்பதையும் வெளிப்படுத்தினர். அந்த மெய்யான ஒளி இயேசு கிறிஸ்துவின் மனுஉருவேற்கும் பொழுது வானசேனையின் திரள் ஒன்றாக தோன்றி, உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை, பூமியில் மனுஷனுக்குள் சமாதானம், மனுஷர் மேல் பிரியம் என்று ஆர்ப்பரித்தார்கள். ஆகவே ஒளியாக இறைவன் உங்களையும் என்னையும் முழு உலகையும் எழும்பி பிரகாசிக்க அழைக்கிறார். உன் ஒளி வந்தது, அது உன் மேல் உதித்தது என்று உற்சாகப்படுத்தி நம்மையும் அவருடைய ஒளியில் பிரகாசிக்க செய்கிறார்.
இறைவா! நீங்களும் ஒளியின் பிள்ளைகளாய் நடந்துக் கொள்ளுங்கள் என்ற உமது அழைப்பை ஏற்று வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.