2 சாமுலேல் 15 : 1-14 21 ஜனவரி 2025, செவ்வாய்
“மாறுபாடுள்ளவன் சண்டை கிளப்பி விடுவான்; கோள் சொல்லுகிறவன் தோழரையும் பிரித்து விடுவான்.”
– நீதிமொழிகள் 16 : 28
மாறுபாடுள்ளவன் சண்டையை கிளப்புகிறான். கோள் சொல்கிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகின்றான் என்பது உண்மை. ஆனால் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது, உண்மை, நேர்மை, பரிசுத்தம், நீதி, நன்னடத்தை. கடவுளுக்கு பயப்படும் பயம் இவை நமது சொத்து சுகம், வளங்கள் இவற்றைவிட முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பெரும்பாலும் சுயநலமானவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு நன்மை வருமெனில் யாரையும் துன்பப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பணம், அதிகாரம் போன்றவற்றுக்காக எப்பேர்ப்பட்ட குற்றங்களையும் இவர்கள் செய்வார்கள். அதை நியாயப்படுத்தவும் செய்வார்கள். எனக்கு சம்பளம் பத்தலை, லஞ்சம் வாங்குகிறேன் என்று சொல்பவரை நான் அறிவேன். நான் சீனியர். ஜீனியர்கள் எனக்கு வேலைக்காரர்கள்தான் என்று சொல்லுகிற அதிகாரிகள் உண்டு. இவை பாவம். இவர்களுடைய பாவ எண்ணங்களை ஆண்டவர் வெறுக்கிறார். ஒரு குழுவோ, குடும்பமோ, அலுவலகமோ, சமூகமோ சமாதானமாக அன்பாக வாழ்ந்திருக்கவே அதில் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டும். மாறாக தனது சுயநலத்திற்காக அவற்றைக் கலைத்து விடுதல் கூடாது. கடவுளின் அன்பைப் பெற்றவர்கள் நாம். அதை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளுவதே சரியான கிறிஸ்தவ வாழ்க்கைமுறை. இயேசுவே நமக்கு வழிகாட்டி.
அவரது அடி சுவடுகளை பின்பற்ற நமக்கு அவரது சிலுவை அன்பை முன்மாதிரியாக வைத்துள்ளார். அந்த அன்பு எல்லோரையும் குறிப்பாக சத்துருவையும் ஏற்றுக்கொள்ளும் அந்த அன்பில் வாழ அழைக்கின்றார்.
கடவுளே! சுத்த இருதயத்தை எண்ணிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.