எபேசியர் 3 : 9-13 25 டிசம்பர் 2024, புதன்
“கடவுளின் சகல பரிபூரணமும் கொள்ளுமட்டும் நிரப்பப்பட வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.” – எபேசியர் 3 : 19
மெர்ரி கிறிஸ்மஸ்! உங்கள் அனைவருக்கும் வான்மலர் இல்லத்தின் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!
இறைவன் மனிதனாகப் பிறந்தார். இதுவே கிறிஸ்மஸ்! இறைவன் பல்லாண்டுகளுக்கு முன்பே செய்த தீர்மானம். இறைமக்கள் வாயிலாக காலாகாலத்தில் சொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தது. இறைவனின் தீர்மானம் இயேசுவின் பிறப்பில் உண்மையானது. இறைவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. முழுத்தூய்மையும் ஆற்றலும் நிறைந்த இறைவனை, மனிதனாகி வந்த இறைவனாம் இயேசுவே நமக்கு வெளிப்படுத்தினார். வல்லமையுள்ள, தூய்மையுள்ள இறைவன், மனிதனை வாழ்விக்க மனிதனாகப் பிறந்தார். இந்த மகிழ்ச்சிதான் கிறிஸ்மஸ் நாளின் சிறப்பு.
இயேசுவின் பிறப்பு அனைவர் வாழ்விலும் முழுமையைச் சுட்டிக்காட்டுகிறது. எனக்காக ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார். இது நமக்கு புதிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயேசுவின் பிறப்பு சமாதானம், மகிழ்ச்சி, தூய்மை மன்னிப்பு ஆகியவற்றை மனிதருக்கு தருகிறது. சகலமும் இயேசுவில் அடங்கி இருக்கிறது. அவரை ஏற்றுக்கொள்ளும் நமக்கு நிறைவான வாழ்வைத் தருகிறார் இயேசுவே.
நாட்டின் தலைவர்கள் பிறந்தநாளில் அன்னதானமும், வஸ்திரதானமும் செய்கிறோம். ஏன்? மகிழ்ச்சியை பிறருடன் பங்கிட்டுக் கொள்ளவே பரிசுகளைக் கொடுக்கிறோம், பெறுகிறோம். உலகில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர் இயேசு. இல்லாமையால் மகிழ்ச்சியைக் காணமுடியாத பலர் இன்றைக்கும் நம்மோடு வாழ்கின்றனரே. நீங்கள் இப்போது கிறிஸ்மஸ் நாட்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். இல்லாதவர்களைக் குறித்து இன்றைக்கு நினைக்கிறீர்களா? இவர்களுக்கு எதையாபது கொடுக்க விரும்பினால் இப்பொழுதே செய்யுங்கள். தாமதித்தால் நமது மனம் மாறிவிடும்.
கடவுள் சகல நன்மைகளையும் நமக்குப் பூரணமாக அருளுகிறார். குறைவுள்ளவர்களுக்கும் கொடுத்து கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். கொடுங்கள்…. மகிழ்ச்சி இரண்டு மடங்காகும்.
அன்புள்ள கடவுளே! உமது மைந்தன் இயேசுவை எங்களுக்காக உலகத்தில் அனுப்பினதற்காக உமக்கு நன்றி. நீர் எனக்கு அருளும் மகிழ்ச்சியும் சமாதானமும் பிறர் வாழ்விலும் கலந்திட எங்களை செயல்பட வைத்தருளும். ஆமேன்.