saint-marks2018-01-20T06:58:08+00:00

2 கொரிந்தியர் 9 : 6-8                                     09 ஏப்ரல் 2025, புதன்

“உங்கள் உபகாரம் லோபத்தனமாயல்ல, நன்கொடையாகவே ஆயத்தமாயிருக்க வேண்டுமென்பது என் நோக்கம்.”

– 2 கொரிந்தியர் 9 : 5

நம் நாட்டில் கிராமப் பொருளாதாரம் மிகப் பின்தங்கியுள்ளது. கிராமச் சபைகளின் பொருளாதாரம் இன்னும் பரிதாபம். விவசாயக் கூலிகளாக, சிறு விவசாயிகளாக, தினக்கூலிகளாகக் குறைந்த பொருளாதாரத்தில் வாழ்பவர்கள் கிராமத்தில் அதிகம்.

திருச்சபை வளர்ச்சி குறித்த, கிராம விசுவாசிகளின் உற்சாகம் ஆர்வம் பங்கேற்பு, பட்டணத்துச் சபைகளைவிட சிறப்பாகவே இருக்கும். பொருளாதாரக் குறைவால் கிராமச் சபைகளின் முன்னேற்றம் பாதிக்கப்படும்.

கோழி முட்டையிட்டால் முதல் முட்டை ஆலயத்துக்கே. தோட்டத்தில் விளைகிற முதல் காய் அல்லது கனி எதுவானாலும் அது ஆண்டவருக்கே… என்ற பழைய ஒழுங்கை ஆசரிப்பவர்கள் கிராமக் கிறிஸ்தவர்கள்.

காணிக்கை கொடுப்பதில், நாம் கர்த்தரின் கிருபையை நினைத்து நன்றி சொல்லுகிறோம். கர்த்தரின் திருப்பணியைத் தாங்கும் பொறுப்பில் நமது பங்கும் உள்ளது என்பதையும் காணிக்கையில் உறுதி செய்கிறோம். காணிக்கை படைத்தல் பக்தியோடும், அக்கறையோடும் திட்டமிட்டும் செய்யப்படுதல் நன்று. கஞ்சத்தனமாக அல்ல, ஊழிய நோக்குடன், நன்றியாகக் காணிக்கை படைப்போம்.

கொரிந்து பட்டணத்தில் வாழ்ந்த விசுவாசிகள் செல்வச் செழிப்பில் வாழ்ந்திருக்கலாம். பட்டணங்கள் செல்வச் செழிப்பிற்கு அடையாளம்தானே. பட்டண வாழ்க்கையில் எவ்வளவு வருமானம் வந்தாலும் போதாது. பகட்டு வாழ்க்கை முக்கியமாக மாறும்போது, பக்தி வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

எனவேதான் பவுலடியார் ‘ஆயத்தமுள்ள நன்கொடை’ தான் ஆண்டவருக்கு முன் அழகு என்கிறார். பணம் மட்டுமல்ல, மனமும் ஆண்டவருக்கு முன்பு வந்திட திட்டமிடப்பட்ட ஆயத்தம் அவசியப்படுகிறது.

பல குடும்பங்களில் ‘காணிக்கை’ திட்டமிடப்பட்டு வருவதல்ல குடும்பத்தலைமைகள் காணிக்கை படைத்தலைப்பற்றிப் பெரிதாக நினைப்பதில்லை.

கடவுளின் அன்பைக் கல்வாரி மலையில் கண்டோம். பின்பு கல்லறையில் உயிர்த்த இயேசுவையும் கண்டோம். எல்லாம் திட்டமிட்டு நடந்தன.

தேவ அன்பைத் தெளிவாகக் கண்டவரின் வாழ்வு திட்டமிட்ட பக்தி வாழ்வாக இருக்கும். இந்தப் பக்தி வாழ்வில் திட்டமிட்ட காணிக்கை படைப்பு உயர்வான செயல்முறை கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணருவோமாக.

எல்லா நன்மைகளையும் வழங்கி எம்மை ஆசீர்வதிக்கும் அன்பின் தெய்வமே, உமது அன்புக்கு நன்றியுள்ளவராக வாழ, திட்டமிட்டு காணிக்கை படைத்திட எம்மையும் வழிநடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

Go to Top