Christianmedia.in

நல்ல நீதி

மத்தேயு 5 : 44-46                                                                                          8 பிப்ரவரி 2012, புதன்
“உங்கள் பிதா …. தீயோர் மேலும் நல்லோர் மேலும் …..
மழை பெய்யச் செய்கிறார்.” -  மத்தேயு 5 : 45

பாரதியார் பாடின ‘முரசு’ கவிதையில் ‘எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ’ என்று முடிக்கிறார்.  தியானப் பகுதி நம்மைப் படைத்தவரின் பாரபட்சமற்ற தன்மையையும் மன உருக்கத்தையும் காண்கிறோம்.  இன்றைய தியானப்பகுதி இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் இடம் பெற்றதாகும்.  இயேசு தம் சீடர்களுக்கு வாழ்க்கை முறை பற்றிப் போதித்தார்.  இங்கு மனித நீதிக்கும் தெய்வ நீதிக்கும் உள்ள வேறுபாடு சுட்டிக் காட்டப்படுகின்றது.  மனித நீதி அல்லது வாழ்க்கை நெறி உன் அயலானிடம் அன்பு கூரு, உன் சத்துருவையோ பகை என்பதாகும்.  ஆனால் தெய்வ நீதியோ உங்களைப் பகைக்கிறவர்களையும் அன்பு கூருங்கள்.  அவர்கள் நல்வாழ்வுக்காக ஜெபியுங்கள் என்று நமது ஆண்டவர் கூறுகின்றார்.  இங்கு தெய்வநீதி அல்லது தெய்வச் செயல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  நல்லவர்களோ தீயவர்களோ அவர்கள் யாராயிருந்தாலும் அவர்களிடம் கடவுள் அன்பு காண்பிக்கிறார்.  கடவுளைத் தொழுது கொள்ளுகிறவர்களோ, தொழுது கொள்ளாதவர்களோ அனைவருக்கும் கடவுள் நன்மை செய்கிறார்.  இது தான் கடவுளின் நல்ல நீதி.  கடவுளின் நீதி எல்லாரையும் மன்னிக்கின்றது.  எல்லாரையும் தம் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளுகின்றது.  எல்லாரையும் பாரபட்சமின்றி ஆதரிக்கின்றது.  எல்லாருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களையும் அளிக்கின்றது.  சிலுவையில் தொங்கிய திருடன் ஒருவனை இயேசு ஏற்றுக்கொண்டார்.  அவனுக்கு அவரோடு இருக்கும் விண்ணக வாழ்வை வழங்கினார்.  யூதர் அல்லாதோரை யூதர்கள் இழிவாக எண்ணினர்.  ஆனால் இயேசுவோ அவர்களையும் கடவுளின் பிள்ளைகள் என்றழைத்து, அவர்களுக்கும் நன்மை செய்தார்.
எல்லோருக்கும் எல்லாம் வழங்கப்படவேண்டும் என்பதே தெய்வ நீதி.  சூரியனைப் பார்க்கிறோம்.  அதில் கடவுளின் கருணையைப் பார்க்கிறோம். மழையில் கடவுளின் மனதுருக்கத்தைப் பார்க்கிறோம்.  சூரியனும், மழையும் நம் இரட்சகரின் பிதாவாகிய பரம பிதாவின் நீதிக்கு எடுத்துக் காட்டுகள்.  நாம் இவ்வுலகில் இறை நீதியுடன் வாழ பரிசுத்த ஆவியானவர்  தமது ஆற்றலை அருள்வார்.  நீதியில் வாழச் செய்வார்.
நீதியின் கடவுளே!  உமது நீதியின் செயல்கள் எங்கள் வாழ்க்கையிலும் காணப்பட கிருபை செய்தருளும்.  இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே ஆமேன்.